மாவட்ட செய்திகள்

சென்னையில் திடீரென உயர்ந்த காய்கறி விலை - தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் அவதி + "||" + Suddenly high in Chennai Vegetable prices People suffer because of scarcity

சென்னையில் திடீரென உயர்ந்த காய்கறி விலை - தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் அவதி

சென்னையில் திடீரென உயர்ந்த காய்கறி விலை - தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் அவதி
சென்னையில் திடீரென காய்கறி நேற்று விலை உயர்ந்திருந்தது. தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
சென்னை, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதை தொடர்ந்து, திருமழிசை துணைக்கோள் நகரத்தில் காய்கறி அங்காடி அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் சென்னையில் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் விலையும் உயர்ந்திருக்கிறது.

தற்போது ஆங்காங்கே உள்ள தற்காலிக காய்கறி கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலுமே பொதுமக்கள் காய்கறி வாங்க வேண்டியது இருக்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினத்தை காட்டிலும் காய்கறி விலை நேற்று உயர்ந்திருந்தது. 4 முருங்கைக்காய் 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனை ஆனது. ரூ.15-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை ஆனது. அதேபோல கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், வெண்டை, காராமணி போன்றவையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்திருந்தன. மேலும் கடைகளில் நேற்று பல காய்கறிகள் கிடைக்காத நிலையும் இருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘காய்கறி திடீரென்று விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மார்க்கெட்டுக்கு வரவேண்டாம், நாங்களே அதே விலையில் காய்கறியை வீடு தேடி கொண்டு வருகிறோம் என்று வியாபாரிகள் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு திடீரென விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஊரடங்கை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதை எப்போதுதான் விடப்போகிறார்களோ...’ என்றனர்.

“கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் இருந்து சரக்குகளை வாங்கி வருகிறோம். அங்கேயுள்ள வியாபாரிகள் எங்களுக்கு குறைவான சரக்குகளை அதிக விலைக்கு தருகிறார்கள். நாங்கள் சென்ன செய்ய முடியும்?” என்று வியாபாரிகளும் கேள்வி எழுப்புகிறார்கள்.