பூ மார்க்கெட் மூடப்பட்டதால் தள்ளு வண்டிகளில் நடக்கும் வியாபாரம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.80-க்கு விற்பனை
ஊரடங்கு உத்தரவு காரணமாக பூ மார்க்கெட் மூடப்பட்டதால் ஆங்காங்கே தள்ளு வண்டிகளில் மல்லிகைப்பூ விற்பனை நடந்து வருகிறது.
தஞ்சாவூர்,
ஊரடங்கு உத்தரவு காரணமாக பூ மார்க்கெட் மூடப்பட்டதால் ஆங்காங்கே தள்ளு வண்டிகளில் மல்லிகைப்பூ விற்பனை நடந்து வருகிறது. தஞ்சையில் மல்லிகைப்பூ விலை கடுமையாக சரிந்து வருகிறது. கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூ மார்க்கெட் மூடல்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள் விற்பனை செய்ய பல்வேறு இடங்களில் தற்காலிக மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பூ மார்க்கெட் மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பூ வியாபாரம் நடைபெற அதிகாரிகள், விவசாயிகளுக்கு வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதிச்சீட்டு வழங்கி, விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட வியாபாரிகளையும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
பூக்கள் விலை சரிவு
இருப்பினும் ஆங்காங்கே பூக்களை பறிக்கும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். காரணம், ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டதால் பூக்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பூக்களின் விலையும் சரிந்து வருகிறது.
தஞ்சையில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவும் பூ வியாபாரிகள் காய்கறி மார்க்கெட் போடப்பட்டுள்ள இடத்தின் அருகேயும், மீன் வியாபாரம் செய்யும் இடத்தின் அருகேயும், பல்வேறு கடைகளின் முன்பும் விற்பனை செய்து வருகிறார்கள்.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகள் மூலமும் பூக்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
கூவி, கூவி விற்பனை
தஞ்சை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தள்ளு வண்டிகளில் பூக்கள் விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது.
அதுவும் பூ வியாபாரம் செய்பவர்கள் பாலிதீன் பைகளில் எடை போட்டு வைத்து கூவி, கூவி விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால் பூக்கள் விற்பனையும் குறைந்தே காணப்படுகிறது.
Related Tags :
Next Story