மும்பை, புனேயில் 5 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் - மாநில அரசு அறிவிப்பு


மும்பை, புனேயில் 5 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் - மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2020 4:45 AM IST (Updated: 7 May 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, புனேயில் 5 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் வீழ்ச்சி அடைந்து உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலின் மையப்பகுதியாக உருவெடுத்து உள்ள மும்பை பெருநகரம் மற்றும் புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட் மற்றும் மாலேகாவ் ஆகிய மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் 5 சதவீத ஊழியர்களுடன் செயல்படும்.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் துணை செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் அதிகாரிகளின் வருகை 100 சதவீதமாக இருக்கும். மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை 33 சதவீதமாக இருக்கும்.

ஆரோக்கிய சேது செயலி

இருப்பினும் சுகாதாரம், குடும்ப நலன், காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு படை, அவசர சேவைகள், பேரிடர் மேலாண்மை, நேரு யுவகேந்திரா, நகராட்சி சேவைகள் மற்றும் பல்துறை அலுவலகங்கள் முழுமையான ஊழியர்கள் வருகையுடன் செயல்படும்.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி பணியாற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான சுகாதார மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story