புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் - சிவசேனா தாக்கு


புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் - சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 6 May 2020 11:19 PM GMT (Updated: 6 May 2020 11:19 PM GMT)

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் என சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.

மும்பை, 

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மராட்டியம் மற்றும் குஜராத்திற்கு குடிபெயர்ந்து உள்ளனர். நேற்று வரை இந்த தொழிலாளர்கள் அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் வாக்கு வங்கியாக இருந்தனர். இந்த நெருக்கடி காலத்தில் அவர்கள் சொந்த மாநிலத்தை தேடி செல்லும் போது, அந்த மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றன.

குறிப்பாக உத்தரபிரதேச அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் முன் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கடும் நிபந்தனை விதிக்கிறது. அந்த மாநில நிலைப்பாடு மிகவும் கொடூரமானது மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானது. கோட்டாவில் சிக்கித்தவித்த ஆயிரக்கணக்கான மாணவர்களை மீட்பதற்காக நூற்றுக்கணக்கில் பஸ்கள் அனுப்பப்பட்டன. அவர்கள் பணக்காரர்கள் என்பதால் எந்தவித சோதனையும் இன்றி மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சோனியா காந்திக்கு பாராட்டு

மராட்டியத்தில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இந்த மாநில அரசு நன்றாக கவனித்துக் கொண்டது. ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றனர். அதேநேரம் அவர்களின் சொந்த மாநிலம் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரெயில் கட்டண செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்ளும் என்று கூறியது பாராட்டுக்குரியது. இது தான் மனிதாபிமானம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பூனைகளோ அல்லது நாய்களோ அல்ல.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story