சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி வந்த நபருக்கு கொரோனா திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு


சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி வந்த நபருக்கு கொரோனா திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 May 2020 11:26 PM GMT (Updated: 6 May 2020 11:26 PM GMT)

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி,

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து வந்த நபர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர், சென்னை கேளம்பாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து பொக்லின் எந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 30-ந் தேதி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து முறையான அனுமதி சீட்டு பெற்று காரில் திருத்துறைப்பூண்டி வந்தார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொற்று உறுதி

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான விளக்குடி கீழத்தெரு மற்றும் அவரது மாமனார் ஊரான கட்டிமேடு தெற்கு தெரு ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அங்கு நடந்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன் தலைமையிலான வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் பார்வையிட்டனர்.

32 ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில், கொரோனா நோய் தொற்றினால் 31 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 24 பேர் குணம் அடைந்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story