கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்படி எங்கள் அரசு நடக்கவில்லை - மந்திரி ஆர்.அசோக் பேட்டி


கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்படி எங்கள் அரசு நடக்கவில்லை - மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2020 5:25 AM IST (Updated: 7 May 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்படி எங்கள் அரசு நடக்கவில்லை என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதில் மத்திய அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்படி மாநில அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்கிறபடி எங்கள் அரசு நடக்கவில்லை. அவரது பேச்சை காங்கிரசாரே கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் டி.கே.சிவக்குமாரின் பேச்சை கேட்க வேண்டுமா?.

எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா உள்ளார். அவர் கூறும் ஆலோசனைகளை நாங்கள் கேட்போம். ஆனால் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு எந்த மரியாதையும் இல்லை. கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் சொல்கிறார். அதற்காக போக்குவரத்து உள்ளிட்ட படிகளை வாங்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.

அவர் தன்னிடம் பணம் இருந்தால் அதை மக்களுக்கு வழங்கட்டும். கட்சி தலைவராக வந்துவிட்டோம் என்பதால் அவருக்கு ஆசைகள் அதிகரித்துவிட்டன. புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு சுற்றுலா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதே போல் தான் டி.கே.சிவக்குமார் ஏதேதோ ஆசைப்படுகிறார். அவர் தனது கருத்துகளை கூறட்டும். ஆனால் அளவுக்கு அதிகமாக கூற வேண்டாம்.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

Next Story