கொரோனா ஊரடங்கால் கிலோ ரூ.2-க்கு விற்பனையாகும் பூசணி கால்நடைகளுக்கு தீவனமாக்கும் விவசாயிகள்
கொரோனா ஊரடங்கால் பூசணிக்காய் கிலோ ரூ.2-க்கு விற்பனை ஆகிறது. இதனால் பூசணிக்காயை விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.
திசையன்விளை,
கொரோனா ஊரடங்கால் பூசணிக்காய் கிலோ ரூ.2-க்கு விற்பனை ஆகிறது. இதனால் பூசணிக்காயை விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.
பூசணிக்காய்
நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் பூசணிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூசணிக்காய், கேரளா, நாகர்கோவில், நெல்லை, பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இங்கிருந்து பூசணிக்காய்களை வெளியூர் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல முடிவது இல்லை.
விலை வீழ்ச்சி
இதனால் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கொரோனாவுக்கு முன்பு ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் பூசணிக்காயை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வரும் அவல நிலை நிலவுகிறது. இதுகுறித்து திசையன்விளை பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீனிவாசன், கிருஷ்ணப்பா மார்த்தாண்டன் ஆகியோர் கூறியதாவது:-
குறைந்தபட்ச விலை
நாங்கள் பூசணிக்காய் பயிரிட்டு இருக்கிறோம். ஒரு ஏக்கரில் பூசணிக்காய் உற்பத்தி செய்ய ரூ.15 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கொரோனா வைரஸ் காரணமாக வெளியூர்களுக்கு காய்களை அனுப்ப முடியவில்லை. முன்பு வழக்கமான லாரிகள் மூலம் அனுப்பி வந்தோம். ஒரு மூட்டை பூசணிக்காய்க்கு வாடகையாக ரூ.100 கொடுப்போம். இப்போது அந்த லாரிகள் ஓடாததால், தனியாக வாடகை லாரியில் அனுப்பி வைக்கிறோம். இதனால் கூடுதல் வாடகை கொடுக்க வேண்டி உள்ளது.
மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.2-க்கு விற்பனை ஆகிறது. காய் பறிக்க கூலி, வாடகை, கமிஷன், இறக்குவதற்கான கூலி என பார்க்கும்போது, பூசணிக்காயை விற்று கிடைக்கும் பணத்தை காட்டிலும் அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் வீணாக மார்க்கெட்டுக்கு அனுப்பி நஷ்டப்படுவதை விட கால்நடைகளுக்கு அவற்றை தீவனமாக அளித்து வருகிறோம். எனவே, அரசு விவசாயிகளின் நலன் கருதி, அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story