நெல்லை தற்காலிக சந்தையில் வியாபாரிகள் கடைகளை திறக்காததால் பரபரப்பு


நெல்லை தற்காலிக சந்தையில் வியாபாரிகள் கடைகளை திறக்காததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 May 2020 3:01 AM GMT (Updated: 7 May 2020 3:01 AM GMT)

நெல்லை தற்காலிக சந்தையில் வியாபாரிகள் கடைகளை திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை தற்காலிக சந்தையில் வியாபாரிகள் கடைகளை திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

நயினார்குளம் மார்க்கெட்

நெல்லை டவுன் நயினார்குளத்தில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அங்கிருந்த பல கடைகள் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சுமார் 30 கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. அந்த மார்க்கெட்டுக்கு தினந்தோறும் ஏராளமான லாரி மற்றும் மினிலாரிகள் வந்து சென்றன.

‘சீல்’ வைப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவியதை தொடர்ந்து, நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. நெல்லை புதிய பஸ் நிலையம் அருகேயும், பழைய பேட்டை லாரி முனையம் ஆகிய இடங்களுக்கு மாற்ற நெல்லை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைகளுக்கு காலவரையின்றி மூடுவதாக வியாபாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க் கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கடையை திறக்காத வியாபாரிகள்

இந்த நிலையில் நெல்லை டவுன் சாப்டர் பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் நயினார்குளம் மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடைகளை திறக்காமல் புறக்கணித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள சந்தையில் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

நெல்லை டவுன் ரத வீதிகளில் தள்ளுவண்டி கடைகள் அதிக அளவு நேற்று காலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கடைகளையும் போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் அமைக் கப்பட்டிருந்த நடைபாதை கடைகளும் அகற்றப்பட்டன.

Next Story