தேனி மாவட்டத்தில் 38 மதுக்கடைகள் இன்று திறப்பு முக கவசம் அணியாதவர்களுக்கு விற்பனை கிடையாது


தேனி மாவட்டத்தில் 38 மதுக்கடைகள் இன்று திறப்பு முக கவசம் அணியாதவர்களுக்கு விற்பனை கிடையாது
x
தினத்தந்தி 7 May 2020 8:34 AM IST (Updated: 7 May 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் இன்று 38 மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. முக கவசம் அணியாதவர்களுக்கு மதுவிற்பனை கிடையாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. தேனி மாவட்டத்தில் 94 மதுக்கடைகள் உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் மதுக்கடைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட உள்ளன. தேனி, சின்னமனூர், போடி, பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகள் ஒரு மாத காலமாக நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. ஆண்டிப்பட்டி பகுதி நேற்று முன்தினம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டது. இந்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

திறக்கப்படும் இடங்கள்

மாவட்டத்தில் மொத்தம் 38 மதுக்கடைகள் இன்று திறக்கப்பட உள்ளன. அந்த வகையில் மதுக்கடைகள் திறக்கப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

ஆண்டிப்பட்டி தாலுகாவில் திம்மரசநாயக்கனூரில் உள்ள 3 மதுக்கடைகள், பிச்சம்பட்டி, பாப்பம்மாள்புரம், கண்டமனூர், கோத்தலூத்து, கடமலைக்குண்டு, ஜி.உசிலம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், மயிலாடும்பாறை, கன்னியபிள்ளைப்பட்டி, டி.சுப்புலாபுரம், தங்கம்மாள்புரம், குமணன்தொழு, வருசநாடு, மூலக்கடை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்பட உள்ளன. பெரியகுளம் தாலுகாவில் கெங்குவார்பட்டியில் உள்ள 2 கடைகளும், தேவதானப்பட்டியில் உள்ள கடையும் திறக்கப்படுகிறது.

தேனி தாலுகாவில் கொடுவிலார்பட்டியில் உள்ள 2 கடைகளும், தர்மாபுரியில் ஒரு கடையும் திறக்கப்பட உள்ளது. போடி தாலுகாவில், சங்கராபுரம், டொம்புச்சேரி ஆகிய ஊர்களில் உள்ள கடைகள் திறக்கப்பட உள்ளன. உத்தமபாளையம் தாலுகாவில் ஆங்கூர்பாளையத்தில் 3 கடைகள், சுருளிப்பட்டி, கூடலூர், தேவாரம் ஆகிய இடங்களில் தலா 2 கடைகள், ஹைவேவிஸ், கருநாக்கமுத்தன்பட்டி, பல்லவராயன்பட்டி, சீப்பாலக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

கலெக்டர் அறிவிப்பு

மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சில்லரை விற்பனை நடைபெறும். ஒவ்வொரு கடையிலும் சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு விற்பனை கிடையாது. உடல் நலிவுற்றவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மதுபானம் வாங்க வருவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து மதுக்கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மேற்கொண்டு வருகிறார்.

Next Story