ஊரடங்கு முடிவுகளை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும் மத்திய அரசிடம் நாராயணசாமி வேண்டுகோள்


ஊரடங்கு முடிவுகளை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும் மத்திய அரசிடம் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 May 2020 9:07 AM IST (Updated: 7 May 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளிடம் மத்தியஅரசு விட்டு விட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மெத்தனம் கூடாது

கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய பழ வியாபாரி ஒருவர் புதுச்சேரிக்கு வந்து சில நாட்கள் தங்கி உள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தேனியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுவையில் அவருடன் தொடர்பில் இருந்த 12 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. இருந்த போதிலும் நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் ரத்த சுத்திகரிப்புக்காக புதுச்சேரி வருகின்றனர். அவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பாக சோனியா காந்தி எங்களுடன் ஆலோசனை நடத்தினார். அவரிடம் புதுவை நிலவரம் குறித்து விளக்கினேன். மத்திய அரசு நிதி வழங்காதது குறித்தும் தெரிவித்தேன். ஊரடங்கு இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. மத்திய அரசு ஊரடங்கு தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு மாநில அரசின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.

மாநில அரசின் பரிந்துரையை...

மத்திய அரசுதான் பாதிப்பு விவரங்களை கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம் என அறிவிக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகளை எதுவும் கேட்பதில்லை. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதற்காக 5 ஆயிரம் மக்களை அடைத்து வைத்து இருப்பது நல்லதல்ல. அவர்கள் குடியிருக்கும் பகுதிகளை விட்டு விட்டு மற்ற பகுதிகளை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு, கொரோனா பாதிப்பு குறித்த மண்டலங்களை அறிவிக்கும்போது மாநில அரசின் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கையில் விட்டுவிட வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் தவித்த காரைக்கால் மாணவ-மாணவிகள் அழைத்து வரப்பட்டு விட்டனர். புதுவை பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள். அவர்களின் பயணத்துக்கு தேவையான நிதியை முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உள்ளேன்.

செப்டம்பர் மாதம் வரை

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதுவரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடியாது. எனவே ஊரடங்கு தொடர்பான முடிவினை மத்திய அரசு மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும். ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே விதிமுறையை கடைபிடிக்கிறது.

நமக்கு இப்போது வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. அந்த காய்கறி வாகனங்களை நமது மாநில எல்லைக்குள் புதுச்சேரி டிரைவர்களை கொண்டு இயக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story