திருச்சியில், இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு: போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனைக்கு ஏற்பாடு


திருச்சியில், இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு: போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனைக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 7 May 2020 3:57 AM GMT (Updated: 2020-05-07T09:27:28+05:30)

திருச்சி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதையொட்டி, போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதையொட்டி, போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 183 அரசு மதுபான கடைகள்(டாஸ்மாக்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டது. இதனால் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சாராயம் காய்ச்சுவது, டாஸ்மாக் கடைகளை உடைத்து திருடுவது அதிகரிக்க தொடங்கியதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளின் மதுபாட்டில்கள் பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி மண்டபங்களில் வைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் உள்ள 56 கடைகளில் உள்ள மதுபாட்டில்களும் திருச்சி கலையரங்கம் பழைய திருமண மண்டபம், தேவர்ஹால் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டன.

திறக்க அனுமதி

இந்தநிலையில் சென்னையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முதல் மதுபான கடைகள் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்ட 20 கடைகள் தவிர, இதர 163 கடைகள் இன்று முதல் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்பட உள்ளன.

இதற்காக திருச்சி ஜங்ஷன் கலையரங்க பழைய திருமண மண்டபம், தேவர்ஹால் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு, அந்தந்த கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டோக்கன் முறை

இன்று காலை 10 மணி முதல் மதுபான கடைகளில் விற்பனை நடக்க உள்ளதாலும், கடந்த 40 நாட்களாக மதுவுக்காக ஏங்கி கிடந்த மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மதுக்கடைகள் முன்பு சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, மதுப்பிரியர்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் சுண்ணாம்பு கொண்டு வட்டம் போடப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்படுவதால் ஒவ்வொரு கடைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக கவசங்கள் அணிந்து, டோக்கன் பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் கொடுக்கப்படும் எனவும், ஒருவருக்கு அதிகபட்சமாக 2 மதுபாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாடு

மேலும் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கடைக்கும் தலா 2 போலீஸ்காரர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பாதுகாப்பினை போலீசார் அளித்திட வேண்டும்.

மதுக்கடைக்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story