கோயம்பேட்டில் இருந்து வந்ததால் வினை அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரியலூர்,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அரியலூர் மாவட்டத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள்
அரியலூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்தனர். அவர்களில் பலர் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டவுடன் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் சிலர் வராமல் அங்கேயே வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வேலை பார்த்த ஏராளமான தொழிலாளர்கள் அங்கிருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வேன், லாரிகளில் ரூ.2 ஆயிரம் வரை கொடுத்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்தனர். அவர்களை அரியலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் நிறுத்தி விசாரணை செய்து, கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
188 பேருக்கு கொரோனா
இந்நிலையில் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 400 பேரின் சளி, ரத்த மாதிரிகள் சுகாதாரத்துறையினரால் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் விவரம் வருமாறு:-
அரியலூரை சேர்ந்த 6 பேர், பரணத்தை சேர்ந்த 4 பேர், பொன்பரப்பியை சேர்ந்த 3 பேர், செந்துறையை சேர்ந்த 12 பேர், உஞ்சினி, சிறுகடம்பூரை சேர்ந்த தலா 6 பேர், நல்லம்மாபாளையத்தை சேர்ந்த 2 பேர், முத்துகுளத்தை சேர்ந்த ஒருவர், குழுமூரை சேர்ந்த 2 பேர், பொய்யாதநல்லூரை சேர்ந்த 12 பேர், உடையார்பாளையத்தை சேர்ந்த 3 பேர், முனியங்குறிச்சியை சேர்ந்த 3 பேர், வாஞ்சினாபுரம், உடையார்பாளையம் அருகே உள்ள மருக்கலாங்குறிச்சியை சேர்ந்த தலா 7 பேர், ஆண்டிமடம் அருகே சவுர்வெளி கிராமத்தை சேர்ந்த 4 பேர் உள்பட அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 188 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 38 பேர் பெண்கள் ஆவார்கள்.
வீடுகளுக்கு அனுப்பிவைப்பு
இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர்களும், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் மட்டும் முகாம்களில் இருந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்களை முகாம்களில் இருந்து அவரவர் வீடுகளுக்கு அழைத்து சென்று விட்டு, அவர்களை தனிமைப்படுத்தி மாத்திரைகள் மட்டும் சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டால் மட்டும் தொடர்பு கொள்ளவும் என்று கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் போதுமான வசதிகள் இருந்தும், முகாம்களில் இருந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதால் அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இவர்களால் சமூக பரவல் அதிகம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? என்றும், சர்க்கரை நோயாளிகள் உள்ளனரா?, வயதான முதியவர்கள் மட்டும் வசிக்கின்றனரா?, சமீபத்தில் வெளியூரில் இருந்து யாராவது வீட்டிற்கு வந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு, குறிப்பு எடுத்து வருகின்றனர். கணக்கெடுப்பின்போது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று அறிவித்து, அந்த பகுதிகளுக்கு நுழையும் முக்கிய சாலைகளில் கம்புகளை கொண்டு தடுப்புகளை அமைத்து, அதில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் தீவிர நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.
222 ஆக உயர்வு
அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கோயம்பேடு பகுதியில் இருந்து திரும்பியவர்களாலேயே அரியலூர் மாவட்டத்தில் இந்த வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story