மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்குழந்தைகள் போராட்டம்
திருமானூர் ஒன்றிய பகுதியில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
திருமானூர் ஒன்றிய பகுதியில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்தபடி இன்று(வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குந்தபுரம், திருமானூர், சுள்ளங்குடி ஆகிய பகுதிகளில் பள்ளிக்குழந்தைகள், டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில குழந்தைகள், மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியிருந்தனர். இதில் திருமானூர் காந்திநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையிலும், சுள்ளங்குடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையிலும் குழந்தைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மது குடிப்பதை மறந்துள்ளனர்
இது குறித்து பள்ளிக்குழந்தைகள் கூறுகையில், கிராம மக்கள் பணமின்றியும், அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றியும் சிரமப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பலரும் வாழ்வாதாரத்தை இழந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்து விட்டனர். இந்த நிலையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது என்பது, வெந்தப்புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. எங்கள் கிராமத்தில் பலரும் மது குடிப்பதை மறந்து நல்ல முறையில் இருந்து வருகின்றனர். ஊரடங்கினால் பலரும் குடிபோதையில் இருந்து மீண்டுள்ளனர் என்றனர். மேலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும், என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Related Tags :
Next Story