மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கும் ஆமைகள் + "||" + At Thoothukudi Beach While in the dead Rest Tortoises

தூத்துக்குடி கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கும் ஆமைகள்

தூத்துக்குடி கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கும் ஆமைகள்
தூத்துக்குடி கடற்கரையில் தொடர்ந்து ஆமைகள் இறந்த நிலையில் ஒதுங்கி வருகின்றன.
தூத்துக்குடி, 

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் அரியவகை மீன்கள், கடல் ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. இதில் கடல் ஆமைகள் அதிக அளவில் காணப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு, பெரியதாழை, புன்னக்காயல் முதல் தூத்துக்குடி, கீழவைப்பார் முதல் வேம்பார் வரையிலான பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு வந்தன.

தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆமைகள் வரத்து குறையத் தொடங்கியது. இதனால் கடல் ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆமை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த கடல் ஆமைகள் எந்த பகுதியில் குஞ்சு பொரித்து சென்றதோ, அந்த பகுதிக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் வந்து குஞ்சு பொறிக்கும் குணம் உடையது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் குறைந்த அளவிலான சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன.

அதே போன்று கடற்கரையோரங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இதனால் கடலில் ஆமைகளுக்கு தொந்தரவு குறைந்து இருப்பதால், அதிக அளவில் தூத்துக்குடி கடல் பகுதியை நோக்கி ஆமைகள் வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வரும் போது, சில ஆமைகள் கரையோரங்களில் உள்ள பாறைகளில் மோதி இறக்கும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இறந்து ஒதுங்கின

அதன்படி கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி கடற்கரையோரம் அரியவகை கடல் ஆமைகள் இறந்த நிலையில் ஒதுங்கி வருகின்றன. நேற்று தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் 2 ஆமைகள் இறந்த நிலையிலும், ஒரு ஆமை உயிருடனும் ஒதுங்கின. உயிருடன் ஒதுங்கிய ஆமையை கடலில் விட்ட போதிலும், அந்த ஆமை இறந்து ஒதுங்கியது. இந்த ஆமை மஞ்சள், பச்சை கலந்த நிற ஓட்டுடன் காணப்பட்டன.

இதுகுறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ரகுவரன் கூறுகையில், “தூத்துக்குடி கடல் பகுதியில் அதிக அளவில் கடல் ஆமைகள் காணப்படுகின்றன. இந்த ஆமைகள் காற்று காரணமாக பாறைகளில் மோதும் போது, காயம் ஏற்பட்டு கரை ஒதுங்குகின்றன. 

அவ்வாறு ஒதுங்கும் கடல் ஆமைகள் உயிருடன் இருந்தால், மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் கடலில் விட்டு வருகிறோம். கடந்த வாரம் ஒரு ஆமை கடலில் விடப்பட்டது. மற்றபடி ஆமை வேட்டையாடுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு உள்ளது. ஆமைகள் இறப்பதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை” என்றார்.