ஊரடங்கால் திரைப்படத்துறை முடக்கம்: “நடிகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்
“கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறை முடக்கம் அடைந்துள்ளது. எனவே, நடிகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் மீண்டும் குணமடைந்து வீடு திரும்புகிறவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4,940 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு மூதாட்டியை தவிர மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாக கொரோனா தொற்று ஏற்படாத நிலையில், தற்போது 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர். மற்றொருவர் சென்னையில் இருந்து அனுமதி பெறாமல் வந்தவர். அவர்கள் 2 பேருக்கும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகமானவர்கள் தமிழகத்துக்கு வரக்கூடிய நிலை உள்ளது. எனவே, அதனை எதிர்கொள்வதற்காக ஆய்வுக்கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 பிரதான இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களை கண்டறிந்து, அவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அரசுக்கு தெரியாமல் எவரும், மாவட்டத்துக்குள் நுழைய முடியாது.
டாஸ்மாக் கடைகள்
ஊரடங்குக்கு முன்பாக செயல்பட்ட கடைகளை மீண்டும் படிப்படியாக திறப்பதற்கு ஊரடங்கை தளர்வு செய்து வருகிறோம். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத்தான் முதலில் திறக்க அனுமதித்தோம்.
ஊரடங்கு நிறைவுபெறும் தருணத்தில்தான் மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், சிலர் அரசியலுக்காக புதிதாக மதுக்கடைகளை திறப்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றனர்.
நடிகர்கள் சம்பளம்
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை சந்தித்து, ஊரடங்கால் திரைப்படத்துறை முடக்கப்பட்ட நிலையில் உள்ளதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்குவதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து முதல்- அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.
நடிகர்களின் சம்பளத்தை பொறுத்தவரையில் தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில் அரசு நேரடியாக தலையிட முடியாது. படத்தயாரிப்பாளர்களும், திரைப்படத்துறையினரும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சம்பளத்தை குறைப்பது குறித்து நடிகர்களாகவே முடிவு எடுத்தால் மக்களும் பாராட்டுவார்கள். அந்த நிலையை எடுக்க வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story