தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் 134 டாஸ்மாக் கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று 134 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அன்று முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்களுக்கு போதுமான மதுபானங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் மாவட்டத்தில் பல இடங்களில் சாராயம் ஊறல்கள் போடத் தொடங்கினர். இது போலீசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் கடையின் முன்பு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
134 கடைகள்
தொடர்ந்து நேற்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் 145 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இதில் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள 7 கடைகள், கலெக்டரின் உத்தரவுப்படி 4 கடைகள் ஆக மொத்தம் 11 கடைகள் தவிர 134 டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக நேற்று முன்தினம் குடோன்களில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கூட்டம் அலைமோதியது
நேற்று காலை முதல் டாஸ்மாக் கடைகளின் அருகே முக கவசம் அணிந்தபடி பலர் சுற்றி சுற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மதுவாங்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்தனர்.
காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்ட உடன், டோக்கன் அடிப்படையில் வரிசையாக அனுப்பப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கி விட்டு வெளியில் வந்த ஒவ்வொருவரின் முகத்திலும் வெற்றி புன்னகை காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story