காஷ்மீரில் வீரமரணம் அடைந்த செங்கோட்டை சி.ஆர்.பி.எப். வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்


காஷ்மீரில் வீரமரணம் அடைந்த செங்கோட்டை சி.ஆர்.பி.எப். வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
x
தினத்தந்தி 8 May 2020 4:45 AM IST (Updated: 8 May 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த செங்கோட்டை சி.ஆர்.பி.எப். வீரர் உடல் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

செங்கோட்டை, 


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்றுவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார்.

அவரது உடல் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வழியாக திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் இரவு 7 மணிக்கு சொந்த ஊரான மூன்றுவாய்க்கால் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வழிநெடுகிலும் மலர்களை தூவி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது தோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உடல் அடக்கம்

அங்கு அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்தயாளன், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சமூக இடைவெளி விட்டு நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் மத்திய ரிசர்வ் காவல் படை டி.ஐ.ஜி. நேடிவ் ஜான், துணை கமாண்டர் ஸ்ரீஜித் ஆகியோர் முன்னிலையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சந்திரசேகர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி, தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை சந்திரசேகரின் மனைவி ஜெனிபர் கிறிஸ்டியிடம் வழங்கினார்.


Next Story