பிச்சைக்காரன் பள்ளம் வழியாக மீண்டும் கழிவு நீர் திறப்பு: நுரையாக ஓடிய தண்ணீரால் காவிரி மாசுபடும் அபாயம்
பிச்சைக்காரன் பள்ளம் வழியாக மீண்டும் கழிவு நீர் திறக்கப்பட்டது. இதனால் அங்கு நுரையாக ஓடிய தண்ணீரால் காவிரி மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. எனவே ரசாயன கழிவுகள் வெளியேரவில்லை. இதனால் நீர்நிலைகள் தூய்மை அடைந்தன. காற்று மாசு குறைந்தது. ஒலி மாசு குறைந்தது. ஈரோட்டில் காவிரி ஆறு சுத்தமானது. காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் தூய்மையாக மாறியது. இந்த மாற்றங்கள் எல்லாம் கடந்த காலங்களாக மாறும் நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இயக்க அனுமதி இல்லாத நிலையிலும் நேற்று பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுவும் கழிவுநீர் வெள்ளை நுரையாக சேர்ந்து பள்ளத்தின் பல பகுதிகளிலும் ஆள் உயரத்துக்கு தேங்கி இருந்தது.
இந்த தண்ணீர் காலிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலந்து விடும். இதனால் காவிரி மீண்டும் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனிமேல் தொழிற்சாலை கழிவுகள் காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்கால்களில் கலக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story