திருவள்ளூர் அருகே, டாஸ்மாக் கடை முன்பு 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்த மதுபிரியர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார்


திருவள்ளூர் அருகே, டாஸ்மாக் கடை முன்பு 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்த மதுபிரியர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார்
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-08T03:29:04+05:30)

திருவள்ளூர் அருகே அருகே கடம்பத்தூர், மப்பேடு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு முன்பு திரண்ட மதுபிரியர்கள் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றனர். முண்டி யடித்து சென்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருவள்ளூர், 

மத்திய, மாநில அரசுகள் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் விதமாக கடைகளை ஒவ்வொன்றாக திறக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முதல், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் உள்ள 40 டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன்பு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியிலிருந்து மது வாங்குவதற்காக கடம்பத்தூர், ஸ்ரீதேவிகுப்பம், அகரம், எம்.ஜி.ஆர் நகர், ஏகாட்டூர், திருப்பாச்சூர், பிரயாங்குப்பம், விடையூர், சிற்றம்பாக்கம், புதுமாவிலங்கை, சத்தரை, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதைகண்டு திகைப்படைந்த போலீசார் டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பாக தடுப்புகளை அமைத்து குடிமகன்களை சாலையோரமாக சமூக இடைவெளியுடன் அமரவைத்தனர்.

பின்னர் மதுபிரியர்களுக்கு டோக்கன் கொடுத்து முறையாக செல்ல அறிவுறுத்தினார்கள். மேலும், நேரம் செல்லச்செல்ல மது பிரியர்கள் கூட்டம் அதிகரித்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடம்பத்தூரில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிரயாங்குப்பம் கிராமம் வரை சாலையோரம் குவிந்தனர்.

அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தும், தலையில் துணியைச் சுற்றிக் கொண்டும் மதுவாங்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

போலீசார் தடியடி

நேரம் செல்லச் செல்ல அவர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்த படி நின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக் கன் உள்ளவர்களை மட்டுமே கடைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் டோக்கன் இல்லாமல் வந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த தடியடியில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் நேற்று கடம்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல திருவள்ளூரை அடுத்த மப்பேடு கிராமத்திலும் உள்ள டாஸ்மாக் கடையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க திரண்டனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மப்பேடு கிராமத்திலிருந்து கீழச்சேரி வரை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மது பிரியர்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காமல் முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.

பொன்னேரி

பொன்னேரி தாலுகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக தடை விதிக்கப்படாத பகுதியான மெதூர், அண்ணாமலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று மெதூர், அண்ணாமலைச்சேரி ஆகிய இரண்டு கிராமங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்காக முன்னதாகவே ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்துகிடந்தனர். டாஸ் மாக் கடை மேற்பார்வையாளர் கடையை திறக்க வந்த போது மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

திருத்தணி

திருத்தணியில் நாகலாபுரம் சாலையில் உள்ள மதுக்கடையில் மதுபாட்டில்கள் வாங்க காலையில் இருந்தே மது பிரியர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மது பிரியர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

மது பாட்டில்கள் வாங்க வந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அடையாள அட்டைகளை சரி பார்த்தபிறகு டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

ஆர்.கே.பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதையொட்டி, மக்கள் கட்டுக்கட ங்காமல் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அவர்கள் முண்டியடித்தபடி நின்றதையும் காண முடிந்தது.

ஊத்துக்கோட்டை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்படுவதற்கு முன்பாகவே குடிமகன்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை தாலுகாவில் அம்மம்பாக்கம், பெரிஞ்சேரி, மெய்யூர், பாலேஸ்வரம் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன.

கடைகள் திறந்த மகிழ்ச்சியில் நீண்ட வரிசையில் நின்றிருந்த குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு மது வாங்க அலை மோதினர். இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். சில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

Next Story