டாஸ்மாக் கடைகள் திறப்பு: வரிசையில் நின்று பாட்டில்களை வாங்கிச்சென்ற மதுப்பிரியர்கள்


டாஸ்மாக் கடைகள் திறப்பு: வரிசையில் நின்று பாட்டில்களை வாங்கிச்சென்ற மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 7 May 2020 10:03 PM GMT (Updated: 7 May 2020 10:03 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி கால் கடுக்க வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் கடும் அவதியுற்றனர். சிலர் புதுச்சேரிக்கு போய் அதிக விலை கொடுத்து சாராயம் மற்றும் மது வாங்கி குடித்தனர். ஆனால் அங்கேயும் சாராயம் மற்றும் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் 143 கடைகளில் கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மீதமுள்ள இடங்களில் உள்ள 134 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

நீண்ட வரிசை

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிலர் அதிகாலையிலேயே கடை முன்பு காத்து நின்றனர். நேரம் செல்லச்செல்ல மதுப்பிரியர்களின் வருகை அதிகரித்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

கடலூர் பஸ் நிலையம் அருகில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் திரண்டனர். இதைப் பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து மது பாட்டில் வாங்கி செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினர். இதையடுத்து மதுக்கடை முன்பு நின்று கொண்டிருந்த குடிமகன்கள் கடையின் பக்கவாட்டில் இருபுறமும் சவுக்கு கட்டையால் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிக்குள் நீண்ட வரிசையில் நின்றனர்.

சுமார் 1 கிலோ மீட்டர்

மதுக்கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டதும் மதுப்பிரியர்கள் ஒவ்வொருவராக ஆதார் அட்டையை காண்பித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒரு கட்டத்தில் மதுப்பிரியர்கள் வரிசை ரெயில்வே மேம்பாலத்தையும் கடந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. அதேபோல் இன்னொரு வரிசை பஸ் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை கடந்து வணிக வளாக சாலைக்குள் சென்றது.

கூட்டம் அதிகரித்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் குடை பிடித்துக்கொண்டு வரிசையில் நீண்ட நேரம் கால் கடுக்க காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்த காட்சியை ரெயில்வே மேம்பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் நேரில் ஆய்வு செய்தார். மேலும் மது விற்பனையை கடலூர் சப்-கலெக்டர் ஜெகதீஸ்வரன் ஆய்வு செய்தார். இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, ராமநத்தம் என மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.


Next Story