செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டு காந்தி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு பழைய ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த 41 வயது வியாபாரி ஒருவர் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.
சமீபத்தில் கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் உள்பட மார்க்கெட்டுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அண்ணன்-தம்பி
இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வந்து மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ். நகரில் வைத்து விற்பனை செய்த பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணன்- தம்பி இருவருக்கும் நேற்று தொற்று உறுதியானது. இதையடுத்து தாம்பரம் தற்காலிக மார்கெட்டில் கடை அமைத்துள்ள வியாபாரிகள், மாடம்பாக்கம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல் கோவிலம்பாக் கம் பகுதியில் கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்கி வந்து விற்ற வியாபாரிக்கும், ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டனர். இவர்கள் தவிர செங்கல்பட்டு நகர், சிறுகுன்றம், நெசக்குப்பம், நாவலூர் பகுதிகளில் தலா ஒருவரும், அச்சரப்பாக்கத்தில் 2 பேர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆவர். இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story