விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிய மதுப்பிரியர்கள்


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிய மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 7 May 2020 10:40 PM GMT (Updated: 7 May 2020 10:40 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு படையெடுத்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 226 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு கொரோனா பாதித்த தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறந்தன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 85 கடைகள் திறக்கப்பட்டன.

இங்கு மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது வாங்க வந்தவர்களிடம் அடையாள அட்டை கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள்ஆதார் அட்டையை காண்பித்தனர். அடையாள அட்டையை காண்பித்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அதேபோல் முக கவசம் அணிந்து வந்தால்தான் மதுபானங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் அனைவரும் முக கவசம் அணிந்து வந்ததை காண முடிந்தது.

விரட்டியடிப்பு

மது பாட்டில்களை வாங்கும் முன்பாக கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது. அதன் பிறகே அவர்களுக்கு மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. விழுப்புரத்தை சுற்றியுள்ள காணை, பூத்தமேடு, தென்னமாதேவி, பெரும்பாக்கம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.எஸ்.அடைக்கலாபுரம், செஞ்சி அடுத்த சிங்கவரம், மேல்களவாய், ஜம்போதி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர். மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டபிறகும் ஒரு சில இடங்களில் மதுப்பிரியர்கள் கலையாமல் காத்து நின்றனர். அவர்களை போலீசார் லத்தியை சுழற்றி விரட்டியடித்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்த தடைசெய்யப்பட்ட பகுதியை தவிர இதர பகுதிகளில் 70 டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.

கொரோனா தொற்று உள்ளதால் கள்ளக்குறிச்சி நகரப்பகுதில் உள்ள 8 கடைகள் மற்றும் அருகில் உள்ள சிறுவங்கூர், பெறுவங்கூர் சாலையில் உள்ள 2 கடைகள் என 10 கடைகள் திறக்கவில்லை. கள்ளக்குறிச்சி அருகே 6 கிலோ மீட்டர் தொலைவில் கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் நல்லாத்தூர் கைகாட்டி அருகே உள்ள மதுக்கடையும், ரங்கநாதபுரத்தில் உள்ள மதுக்கடையும் திறக்கப்பட்டது.

ரிஷிவந்தியம்

கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் கடைகள் திறக்கப்படாததால் இந்த இரண்டு கடைகளிலும் மதுப் பிரியர்கள் கூட்டம் அலை மோதியது. நல்லாத்தூர் கைகாட்டி அருகில் உள்ள மதுபானக்கடையில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 2 மதுபாட்டில்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.. அங்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான கடைகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்து நின்று மது வாங்கி சென்றனர். ஒருசிலர் குடைபிடித்தபடி வந்திருந்தனர்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பகண்டை கூட்டுரோடு, ரிஷிவந்தியம் காட்டு எடையார் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலை முதலே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். சங்கராபுரம் நகரில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இக்கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாததால் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுவாங்கிச்சென்றனர்.

Next Story