மதுவாங்க கூட்டம் அலைமோதியதால் மதுக்கடைக்கு பூட்டு வெளியூர் நபர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு


மதுவாங்க கூட்டம் அலைமோதியதால் மதுக்கடைக்கு பூட்டு வெளியூர் நபர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2020 4:12 AM IST (Updated: 8 May 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே கோவிந்தகுடியில் மதுவாங்க கூட்டம் அலைமோதியதால் மதுக்கடைக்கு போலீசார் பூட்டு போட்டனர்.

வலங்கைமான், 

வலங்கைமான் அருகே கோவிந்தகுடியில் மதுவாங்க கூட்டம் அலைமோதியதால் மதுக்கடைக்கு போலீசார் பூட்டு போட்டனர். மேலும் மதுவாங்க வந்த வெளியூர் நபர்களின் மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 மதுக்கடைகள்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதி குடமுருட்டி ஆற்றங்கரையில் 2 மதுக்கடைகளும், தொழுவூர், ஆலங்குடி, ஊத்துக்காடு, நல்லூர், கோவிந்தகுடி ஆகிய பகுதிகளில் தலா ஒரு கடைகள் வீதம் என வலங்கைமான் பகுதியில் மொத்தம் 7 கடைகள் உள்ளன.

ஊரடங்கு உத்தரவால் 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தஞ்சை மாவட்டத்தில் குறைந்த அளவிலான கடைகளே திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.

அலைமோதிய கூட்டம்

இதனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், தாராசுரம், பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள் கோவில், பாபநாசம், திருக்கருக்காவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நல்லூர், கோவிந்தகுடி ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு திரண்டு வந்தனர்.

இந்த கடைகளில் மது வாங்க கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் கோவிந்தகுடி பகுதியை சேர்ந்த பெண்கள் மதுக்கடையை மூடக்கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சி தலைவர் மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல ஆண்களும் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

மதுக்கடைக்கு பூட்டு

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் கோவிந்தபுரத்துக்கு சென்று மதுக்கடை முன்பு திரண்ட கூட்டத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் மதுக்கடையை மூட போலீசார் உத்தரவிட்டனர்.

இதனால் மதுக்கடைக்கு பூட்டு போடப்பட்டது. இதையடுத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். முன்னதாக தஞ்சை சரக டிஐ.ஜி. லோகநாதன் நல்லூர், கோவிந்தகுடி பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பு ஆய்வு மேற்கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தினார்.

அடித்து நொறுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

இதற்கிடையில் கோவிந்தகுடியில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் இருந்து மதுவாங்க வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் மது வாங்க வந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். பல மோட்டார் சைக்கிள்கள் சாலையிலேயே சிதறி கிடந்தன.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story