நடிகர் வடிவேலு பாணியை கடைபிடித்த மதுப்பிரியர்கள்: ஹலோ... டாஸ்மாக் மேலாளரா? கடையை எப்ப சார் தெறப்பீங்க? அய்யம்பேட்டை பகுதியில் நடந்த ருசிகர சம்பவம்


நடிகர் வடிவேலு பாணியை கடைபிடித்த மதுப்பிரியர்கள்: ஹலோ... டாஸ்மாக் மேலாளரா? கடையை எப்ப சார் தெறப்பீங்க? அய்யம்பேட்டை பகுதியில் நடந்த ருசிகர சம்பவம்
x
தினத்தந்தி 8 May 2020 4:24 AM IST (Updated: 8 May 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் வடிவேலு பாணியில் கடை மேலாளரை செல்போனில் தொடர்புகொண்டு கடையை எப்ப சார் தெறப்பீங்க...:? என்று கேட்ட ருசிகர சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் நடந்தது.

அய்யம்பேட்டை, 

மதுக்கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த மதுப்பிரியர்கள், நடிகர் வடிவேலு பாணியில் கடை மேலாளரை செல்போனில் தொடர்புகொண்டு கடையை எப்ப சார் தெறப்பீங்க...:? என்று கேட்ட ருசிகர சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் நடந்தது.

நடிகர் வடிவேலு பாணியில்...

நடிகர் வடிவேலு ஒரு சினிமாவில், மதுக்கடை ஒன்றின் வாசலில் திருடுவதற்காக நின்று கொண்டு இருப்பார். கடையை மூடும் நேரத்தில் கடையின் உரிமையாளருக்கு தெரியாமல் கடைக்கு உள்ளே சென்று விடுவார். அந்த கடையில் உள்ள பணத்தை திருடும் அவர், அந்த கடையில் உள்ள மதுபாட்டில்களை எடுத்து குடித்துக்கொண்டே இருப்பார்.

நீண்ட நேரமாக உள்ளே இருக்கும் அவருக்கு ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். வெளியில் வர முடியாமல் தவிக்கும் அவர், அந்த கடையில் உள்ள போனை எடுத்து கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஹலோ... பிரபா ஒயின்ஸ் ஓனரா...? கடையை எப்ப சார் தெறப்பீங்க...? என்று கேட்பார். இந்த காட்சியை தியேட்டர்களில் ரசிகர்கள் நீண்ட நேரம் கைதட்டியும், விசில் அடித்தும் வரவேற்றார்கள்.

நடிகர் வடிவேலு பாணியில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் நேற்று ஒரு சம்பவம் நடந்தது. இந்த பகுதியில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாததால், மதுக்கடைகளின் மேலாளர்களை செல்போனில் தொடர்பு கொண்ட மதுப்பிரியர்கள், ஹலோ.... டாஸ்மாக் மேலாளரா? கடையை எப்ப சார் தெறப்பீங்க? என்று கேட்ட ருசிகர சம்பவம் நடந்தது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கடைகள் திறக்கப்படவில்லை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 43 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டதால் வாடிப்போய் இருந்த மதுப்பிரியர்கள் நேற்று முதல் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள மதகடி பஜார் பகுதியில் 2 கடைகளும், பசுபதி கோவில், சரபோஜிராஜபுரம், மாங்குடி, கணபதி அக்ரஹாரம் ஆகிய ஊர்களில் தலா ஒரு மதுக்கடையும் என 6 மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

மதுப்பிரியர்கள் ஏமாற்றம்

இதனை அறியாத மதுப்பிரியர்கள் பலரும் காலை முதலே அந்த மதுக்கடைகளின் முன்பு குவிய தொடங்கினர். ஆனால் காலை 10 மணிக்கு மேல் ஆகியும் இந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பொறுமை இழந்த மதுப்பிரியர்கள், தங்களுக்கு தெரிந்த மதுக்கடை மேலாளர்களையும், விற்பனையாளர்களையும் நடிகர் வடிவேலு பாணியில் செல்போனில் தொடர்பு கொண்டு கடையை எப்ப சார் தெறப்பீங்க? என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

அதற்கு டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், இந்த பகுதியில் உள்ள கடைகளை திறப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி வரவில்லை. அனுமதி வந்தவுடன் கடைகள் திறக்கப்படும் என கூறினர். இந்த பதிலில் திருப்தியடையாத சிலர் அருகில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என அங்கு சென்று பார்த்தனர். அந்த கடைகளும் பூட்டிக் கிடக்கவே ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

படையெடுத்தனர்

ஆனாலும் சில மதுப்பிரியர்கள் துவண்டு போய் விடாமல், எப்படியாவது இன்று மதுபாட்டில்களை வாங்கியே தீருவது என்ற முடிவோடு அருகில் உள்ள திருவையாறு மற்றும் அம்மாப்பேட்டை பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த மதுபான கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

இந்த ருசிகர சம்பவத்தை நேரில் பார்த்த அய்யம்பேட்டை பகுதி பொதுமக்கள் தங்கள் தலையில் அடித்துக்கொண்டபடி அங்கிருந்து சென்றனர்.

Next Story