ஊரடங்கால் வருமானம் இல்லாததால் கணவருடன் தகராறு: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
புழல் அருகே காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ்(வயது 25). இவர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா(20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜெகன் செல்வராஜ், போதிய வருமானம் இன்றி தவித் ததாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜெகன் செல்வராஜ் வீட்டின் வெளியே வந்து, காலையில் வியாபாரத்துக்கு செல்வதற்காக தள்ளுவண்டியில் காய்கறிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
பின்னர் வீட்டுக்குள் சென்றபோது, தனது காதல் மனைவி சரண்யா, புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தூக்கில் தொங்கிய சரண்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சரண்யாவுக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் இதுபற்றி சென்னை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story