தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2020 5:00 AM IST (Updated: 8 May 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, 

சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் தியாகராஜன் (வயது 21). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு அதேப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு அவரது தந்தை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள உயர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் சிலமாதங்களுக்கு முன்பு அவரது தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தியாகராஜன் தனது தந்தையின் நினைவாக, அவர் வாங்கிக்கொடுத்த மோட்டார் சைக்கிளை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வேப்பரி போலீஸ் நிலையத்தில் தியாகராஜன் புகார் அளித்து இருந்தார். வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென் றவர்களை தேடி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் திருடு போனதால் தியாகராஜன் கடந்த ஒருமாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேப்பேரி போலீசார் அவரது உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் நினைவாக இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனதால் சில நாட்களுக்கு முன்னதாக மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை முயன்ற அவரை காப்பாற்றியதாகவும், பின்னர் போலீசார் ஊரடங்கு முடிவடைந்ததும் நிச்சயமாக மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தருவதாக கூறியிருந்தாகவும் கூறப்படுகிறது.

Next Story