மதுக்கடைகள் திறப்பை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினரும் தனித்தனியாக நடத்தினர்


மதுக்கடைகள் திறப்பை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினரும் தனித்தனியாக நடத்தினர்
x
தினத்தந்தி 7 May 2020 11:20 PM GMT (Updated: 2020-05-08T04:50:15+05:30)

மதுக்கடைகள் திறப்பை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர், 

மதுக்கடைகள் திறப்பை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினர்.

பழனிமாணிக்கம் எம்.பி.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம்., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள தனது வீடு முன்பு தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் தங்கள் வீடு முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரசார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், நிர்வாகிகள் வயலூர் ராமநாதன், செந்தில் பழனிவேல், பிரபு மன்கொண்டார், மகளிரணி சசிகலா, வட்டார தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு-தி.க.

தஞ்சை கீழவாசலில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் கழகம் சார்பில் மண்டல தலைவர் அய்யனார் மற்றும் நிர்வாகிகள் தங்களுடைய வீடு முன்பு கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story