விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது - மத்திய அரசு பரிசீலிக்க கர்நாடக ஐகோர்ட்டு யோசனை


விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது - மத்திய அரசு பரிசீலிக்க கர்நாடக ஐகோர்ட்டு யோசனை
x
தினத்தந்தி 7 May 2020 11:33 PM GMT (Updated: 7 May 2020 11:33 PM GMT)

விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும், இதுபற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் ஓடவில்லை. இதன்காரணமாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை நிலத்தில் வைத்தே டிராக்டரை கொண்டும், தீயிட்டு எரித்தும் அழித்து வந்தனர். இதுபற்றி அறிந்த சில அரசியல் தலைவர்கள் தாங்களாக முன்வந்து சில விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

விலக்கு அளிக்க சாத்தியம் இல்லை

இந்த நிலையில் விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில், கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், “சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதில் இருந்து விவசாயிகளின் விளை பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு விலக்கு அளிக்க சாத்தியம் இல்லை. அதுபோன்ற விதிமுறை எதுவும் இல்லை” என்று கூறி வாதிட்டார்.

சுங்க கட்டணம்...

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஏ.எஸ்.ஓகா, “ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த முடியவில்லை. அதையும் மீறி பல சிரமங்களை கடந்து அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தினாலும் அந்த பொருட்களின் விலையை மிக குறைவாக நிர்ணயித்து மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

இதனால் விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. இதுமட்டுமல்லாமல் ஊரடங்கால் ஒருசில பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க விவசாயிகளின் சுமையை சிறிதளவில் போக்கும் வகையில் விளை பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை வசூலிக்காமல், அதிலிருந்து விலக்கு அளித்தால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களிடம், சுங்க கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. 

இதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார். மேலும் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story