மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் விற்பனை மந்தம்; தேவதானத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு
மாவட்டத்தில் நேற்று 164 டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கிய நிலையில் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. தேவதானத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு கடை திறக்கப்படவில்லை.
விருதுநகர்,
தமிழக அரசு நேற்று முதல் சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்த நிலையில் விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள 176 டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடு செய்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள 11 கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானம் கிராமத்தில் மக்கள் அங்குள்ள டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கிராமத்திலும் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 164 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட்டது. அரசு அறிவுறுத்தியபடி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கும், 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்கு குறைவானவர்களுக்கும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.
முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் ஆதார் அட்டையில் உள்ள வயதை சரி பார்த்து மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. விருதுநகரில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள தேவாலயத்தின் வாசலை மறித்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்ததற்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை.
44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று அதிக கூட்டம் திரண்டு வரும் என எதிர்பார்த்த நிலையில் தான் டாஸ்மாக் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. ஆனால் நகர் பகுதியிலும், கிராமப்பகுதியிலும் காலை முதலே விற்பனை விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது. பல கடைகளில் ஒவ்வொருவராக வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்லும் நிலையை காணமுடிந்தது. மொத்தமாக யாருக்கும் மது பாட்டில்களை விற்பனை செய்யப்படவில்லை. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மந்தமானது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் மதுபிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க இயலாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், ஓரிரு தினங்கள் கழித்து விற்பனையில் விறுவிறுப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்தார். ஒரு வகையில் குறைவான மது விற்பனை மாவட்ட மக்களுக்கு மனதிருப்தியை அளிக்க வாய்ப்பு இருக்கும் எனவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story