மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்த பாடம் பாடத்திட்டத்தில் சேர்க்க மந்திரி சுரேஷ்குமார் உத்தரவு


மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்த பாடம் பாடத்திட்டத்தில் சேர்க்க மந்திரி சுரேஷ்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 8 May 2020 12:16 AM GMT (Updated: 8 May 2020 12:16 AM GMT)

“பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்த பாடத்தை கற்பிக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு மந்திரி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவது, வரும் கல்வி ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சுரேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-

“விடுமுறை காலத்திற்கு ஏற்றபடி குழந்தைகள் மீது அதிக பாட சுமை ஏற்படுத்தாமல் பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். பாடப்புத்தகங்களில் தேவையற்ற பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக அவசியமான பாடங்களை மட்டும் பாடப்புத்தகங்களில் சேர்க்க ஒரு செயல் திட்டத்தை உடனே தயார்படுத்த வேண்டும்.

திறமையான ஆசிரியர்கள்

கொரோனா வைரஸ் குறித்து அனைத்து வகுப்புகளிலும் ஒரு பாடமாக சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களின் பயிற்சி வகுப்பிலும் இதுகுறித்த அம்சத்தை சேர்க்க வேண்டும். கொரோனா குறித்த பாடத்தை கட்டாயம் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கலவாணி என்ற யூடியூப் சேனல் மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. தொழில்நுட்பம் அடிப்படையிலான கற்றல் முறையை முழுமையாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால் நல்ல திறமையான ஆசிரியர்களை கொண்டு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடம் கற்பித்தலை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோக்கள் அந்த சேனலில் நிரந்தரமாக இருக்கும். மாணவர்கள் தேவைப்படும்போது, அந்த வீடியோவை எடுத்து பார்த்து பயன் பெறலாம்.

தனிமனித விலகல்

சமூக விலகல் அதாவது தனிமனித விலகல் என்பது நமது வாழ்க்கையில் ஒரு நிரந்தர அங்கமாக மாறப்போகிறது. அதனால் பள்ளிகளில் தனிமனித விலகலை பின்பற்றி குழந்தைகளை வகுப்பறைகளில் அமர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான ஒரு கற்றல் செயல் திட்டத்தை தயாரித்து அறிக்கையாக வழங்க வேண்டும்.

இதுகுறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது கல்வித்துறையின் கடமையாகும். இந்த நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்க வேண்டும். கல்வி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வகுத்துள்ள அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கல்வித்துறையில் அதிக அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணையை அறிவித்த பிறகு, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த தேதியையும் அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தகுதி தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்த தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர் பணியிட மாற்றம் தொடர்பாக சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை அதிகாரிகள் வகுக்க வேண்டும்.”

இவ்வாறு மந்திரி சுரேஷ் குமார் பேசினார்.

Next Story