குறைந்த மின்னழுத்தம்: வீடுகளில் மின்விசிறி இயங்காததால் தூக்கமின்றி பொதுமக்கள் அவதி


குறைந்த மின்னழுத்தம்: வீடுகளில் மின்விசிறி இயங்காததால் தூக்கமின்றி பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 8 May 2020 6:02 AM IST (Updated: 8 May 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்விசிறி இயங்காததால் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சீர்காழி, 

குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்விசிறி இயங்காததால் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் மின்மோட்டாரை இயக்க முடியாமல் பருத்தி செடிகள் கருகுகின்றன.

பழுதடைந்த மின்மாற்றி

சீர்காழி அருகே எடகுடிவடபாதி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் மின்வாரியத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து ரூ.30 ஆயிரம் திரட்டி மின்மாற்றியை திருவாரூருக்கு கொண்டு சென்று பழுது நீக்கி கொண்டு வந்தனர். ஆனால் பழுது நீக்கப்பட்ட மின்மாற்றி அடுத்த சில நாட்களில் மீண்டும் பழுதடைந்து விட்டது. எனவே கடந்த 15 நாட்களாக குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.

தூக்கமின்றி பொதுமக்கள் தவிப்பு

இதனால் வீடுகளில் உள்ள மின்விளக்கு, மின்விசிறி மற்றும் டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் அந்தபகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் மின் விசிறியை இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்மோட்டார்கள் இயங்காமல் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட கோடை கால பயிரான பருத்தி செடிகள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, எடகுடிவடபாதி கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு உடனே புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story