டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் நாகை கே.சி.பி. நகரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகரச்செயலாளர் பன்னீர், ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தகட்டூர்
இதேபோல் தலைஞாயிறு அருகே அருந்தவம்புலம் கடைத்தெருவில் மதுக்கடையை மூடக்கோரி தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முருகதாஸ், நிர்வாகிகள் அருண்மொழி தேவி, கார்த்தி, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகட்டூரில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், ஊராட்சி செயலாளர் வீரமணிகண்டன், இளைஞரணி செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருதூரில் ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் தொண்டரணி அமைப்பாளர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணியில் தி.மு.க. கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் போராட்டம் நடந்தது. திருமருகலில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி மற்றும் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து சித்தர்காடு மெயின்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கூறைநாடு சின்னபள்ளிவாசல் தெருவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன் தலைமையில் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். திருக்கடையூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகை மாவட்டகுழு உறுப்பினர் சிம்சன் தலைமையில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. செம்பனார்கோவிலில் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சீர்காழியில் தி.மு.க.வினர் தங்களது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தில் தி.மு.க.வினர் மதுக்கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகளில் சமூக இடைவெளி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீனாட்சிசுந்தரம், காமராஜ், நகர செயலாளர் புகழேந்தி ஆகியோர் அவரவர் வீடுகளில் வாயில் முன்பு மதுக்கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story