நாகை மாவட்டத்தில் மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள் 6 கடைகள் திறக்கப்படவில்லை


நாகை மாவட்டத்தில் மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள் 6 கடைகள் திறக்கப்படவில்லை
x
தினத்தந்தி 8 May 2020 6:26 AM IST (Updated: 8 May 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஆர்வமுடன் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஆர்வமுடன் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 6 கடைகள் திறக்கப்படவில்லை.

மதுக்கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மதுகுடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். நாகை மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவங்களும் நடந்து வந்தது. மேலும் சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் கைது செய்து வந்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 92 கடைகள் நேற்று திறக்கப் பட்டன. ஆனால் மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தர்மங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மேற்கண்ட 6 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.

டோக்கன் வினியோகம்

இந்தநிலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு காலை முதலே மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். மேலும் ஆதார் அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுபாட்டில்களை வாங்குவதற்காக காத்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எல்லா கடைகளிலும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் வரிசையில் செல்வதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகையில் ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, செல்லூர் செல்லும் சாலை, புத்தூர் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்றுகொண்டிருந்தனர். நீண்ட நேரம் எச்சரித்தும் கேட்காததால், அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி சமூக இடைவெளியை பின்பற்ற செய்தனர். நாகை மாவட்டத்தில் முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனை வரும் ஆர்வமுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. அப்போது மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆனால் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.

இந்தநிலையில் தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் பொதுமக்கள் ஊராட்சிமன்ற தலைவர் வனஜாசண்முகத்திடம் மதுக்கடையை திறக்ககூடாது என மனு அளித்தனர். இதையொட்டி தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்படவில்லை.

Next Story