சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து குமரிக்கு வருபவர்களை தனி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு


சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து குமரிக்கு வருபவர்களை தனி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 8 May 2020 7:01 AM IST (Updated: 8 May 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து குமரிக்கு வருபவர்களை தனி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி,

சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து குமரிக்கு வருபவர்களை தனி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமரியில் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குமரிக்கு வருவோர் அதிகரிப்பு

சென்னையில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். அதேபோல், சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதனால் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. குறிப்பாக சென்னையில் இருந்து வரும் நபர்களிடம், கொரோனா அறிகுறி ஏதேனும் தென்படுகிறதா? என சோதனை செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்களுடைய சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காகவும் அனுப்பப்படுகிறது.

புதிதாக தொற்று

அதே சமயத்தில், சென்னை நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையாக இருக்கும் படி உத்தரவிடப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்தாலும், கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்த பிறகே சென்னை மக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அதுவரை தனி முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது.

குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் சூழ்நிலையில், சிறிது அலட்சியமாக இருந்தாலும், கொரோனா வைரஸ் மீண்டும் பரவி கொரோனாவுக்கு எதிரான போரில் குமரி மக்கள் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், குமரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று உருவாகி உள்ளது. அதாவது, பரிசோதனை முடிவில் குமரி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என தெரிய வந்தது.

முகாம் அமைக்க ஏற்பாடு

இந்த நபர்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் சுற்றியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குமரி மாவட்ட மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியது. முகாம்களில் தங்க வைத்து கொரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகு, சென்னை மக்களை அனுப்பும் நடவடிக்கையை தொடர்ந்திருந்தால், கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் மட்டும் தான் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கும். மற்ற நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அலட்சியத்தால் மீண்டும் குமரி மாவட்டத்தில் பலருக்கு கொரோனா பரவும் வாய்ப்பை நாமே ஏற்படுத்தி விட்டோம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை, வெளிமாநிலம், சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து குமரிக்கு வருபவர்களை தனிமை முகாம்களில் அடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, முப்பந்தல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், வேறு எங்கெங்கு தனி முகாம்களை அமைக்கலாம் எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்திருந்தால் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. அதிகாரிகளின் மெத்தனத்தால்தான் மீண்டும் கொரோனா பரவ தொடங்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Next Story