மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு: கோவையில் தி.மு.க கூட்டணி கட்சியினர் போராட்டம்
மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர், கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
கோவை,
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு முழுவதும் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்திலும் 207 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுக்கடைகளை திறக்க கூடாது என்று கோவையில் பல்வேறு இடங்களிலும் நேற்று போராட்டங்கள் அதிக அளவில் நடைபெற்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்து இருந்தார். அதன்படி கோவையில் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு தி.மு.க.வினர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.
கோவை பீளமேடு அண்ணாநகரில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கருப்பு சட்டை அணிந்து அவரது வீட்டின் முன்பு 5 தி.மு.க.வினருடன் சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இதேபோல் கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
காரமடையில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தனது குடும்பத்தினருடன் கோஷம் எழுப்பினார். இதில் விவசாய பிரிவு ஒன்றிய துணை அமைப்பாளர் முத்துசாமி, நெல்லி துறை ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய பிரதிநிதி செந்தில் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் காங்கிரசார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவை கிருஷ்ணசாமி நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூராஜெயக்குமார் தனது வீடு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டமான சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசு ஈடுபடாமல் பணத்தை மையமாகக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறப்பது மக்களின் மீது அக்கறை இல்லாததைத்தான் காட்டுகிறது. மோடி அரசு மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை தராமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் திறக்காதே, திறக்காதே டாஸ்மாக் கடைகளை திறக்காதே, அடிக்காதே, அடிக்காதே மக்களின் வயிற்றில் அடிக்காதே என்பன போன்ற கோஷங்களை அவர் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் பாசமலர் சண்முகம், இளைஞர் அணி மாவட்டத்தலைவர் குமரேசன் மற்றும் சேது, ஷாரூக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சூலூர், சோமனூர் சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆர்.எஸ்புரம், பேரூர், காரமடை, மேட்டுப்பாளையம், இருகூர் பட்டணம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமை தாங்கினார். அவருடன் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பி.முருகேசன், பொதுசெயலாளர்கள் தீரன் கந்தசாமி, எஸ்.எஸ். துரைமணி வட்டார தலைவர் கராத்தே ராமசாமி, நகர தலைவர் பாலு, கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சுப்பிரமணி நெம்பர் பாலு, மற்றும் விளம்பரம் ராமசாமி அந்தோணி, செல்வம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இதே போல் கருமத்தம்பட்டி புதூரில் சி.பி.ஐ மற்றும் விவசாய சங்கத்தினர் கருப்பு துணிக்கட்டி டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிததனர். இதற்கு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் தாங்கினார். இதில் சூலூர் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் கோவை வி.கே.கே.மேனன் ரோடு பகுதியில் உள்ள ம.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து, கருப்புகொடிகளை ஏந்தி மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ம.தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். பி.ஆர். நடராஜன் எம்.பி. தலைமையில் கருப்பு பட்டை அணிந்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மதுக்கடைகளை திறக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
கோவை குனியமுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் மனிதநேய கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்கள். குனியமுத்தூர் பஸ்நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் ஜெம்பாபு உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் உக்கடம், ஆத்துப்பாலம், போத்தனூர், கரும்புக்கடை, சூலூர், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்பட பல பகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியினர் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகமான ஜீவா இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏற்றி வைத்து நேற்று போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார். மாவட்ட பொருளாளர் யு.கே.சுப்பிரமணியம், மணிபாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் கோவை புலியகுளம், பாப்பநாயக்கன் புதூர், நரசிம்ம நாயக்கன்பாளையம், சிங்காநல்லூர் பாலன் நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காந்தி நகரில் கலா தலைமையில் பெண்கள் போராட்டம் நடந்தது.
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் ராவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை கிழக்கு மாநகர மாவட்டத்தில் மாநகர செயலாளர் தனபால் தலைமையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழனிச்சாமி, தங்கவேல், ரமேஷ் (எ) மயூரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story