டாஸ்மாக் கடைகளை திறந்ததால் உற்சாகம்: ஒரு கிலோ மீட்டர் தூரம் நின்ற மதுப்பிரியர்கள்


டாஸ்மாக் கடைகளை திறந்ததால் உற்சாகம்: ஒரு கிலோ மீட்டர் தூரம் நின்ற மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2020 8:15 AM IST (Updated: 8 May 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடி பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது வாங்கி சென்றனர்.

கல்லக்குடி, 

கல்லக்குடி பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது வாங்கி சென்றனர்.

1 கிலோமீட்டர் தூரம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு நேற்று காலை திறக்கப்பட்டன. கல்லக்குடி பகுதியில் காலை முதல் மாலை வரை குடிமகன்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதில் பெருவளப்பூர் கிராமத்தில் தி.மு.க.வினர், தி.க. ஆகிய கட்சிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது என்றும், பின்னர் முழு ஊரடங்கு முடிந்தபின் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்றும் பேசி முடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

துவரங்குறிச்சி

இதுபோல் துவரங்குறிச்சியை அடுத்த கருமலை, பாலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது, துவரங்குறிச்சி பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதே போல் எளமணம் பகுதியிலும் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் குடிமகன்கள் அனைவரும் பாலக்குறிச்சி மற்றும் கருமலை நோக்கி படையெடுத்தனர். இதனால் கருமலை மற்றும் பாலக்குறிச்சி ஆகிய இரண்டு ஊர்களிலுமே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இருப்பினும் கருமலையில் குறைந்த விலை மதுபாட்டில்கள் இல்லாத நிலையில் 250 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டுமே இருந்தது. வேறு வழியில்லாமல் பலரும் அந்த மதுபாட்டில்களையும் வாங்கிச் சென்றனர்.

மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் இரு ஓரங்களிலும் அடுத்தடுத்து 6 டாஸ்மாக் கடைகள் இருந்ததால் கூட்டமில்லை. வையம்பட்டி பகுதியில் ஒரு நபருக்கு ஒரு புல், அல்லது இரண்டு ஆப், அல்லது 4 குவார்ட்டர் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில் ஒவ்வொரு குடிமகனும் அதிகபட்சமாக உள்ள மதுபாட்டில்களையே தேர்வு செய்து மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றனர்.

குடையுடன் வந்த மதுப்பிரியர்கள்

சிறுகனூர் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்ததால் டாஸ்மாக்கடை திறக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொள்ளிடம்நெ.1டோல்கேட், சிறுகாம்பூர், குருவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதுகடைகள் 43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க ஆர்வத்துடன் திரண்டு வந்தனர். சமூக விலகலை கடைபிடிப்பதற்காகவும், வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ளும் வகையில் குடையுடன் வந்து மதுப்பிரியர்கள் மது வாங்கி சென்றனர். கொள்ளிடம் நெ.1டோல்கேட் பகுதி டாஸ்மாக் கடையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வரிசையில் நின்று மதுபாட்டிகள் வாங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

வயதான மூதாட்டி

திருச்சி பொன்மலை கம்பி கேட் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் இருப்பதால் அதிகமான மதுப் பிரியர்கள் குவிந்தனர். பின்னர் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் நிற்க அறிவுறுத்தப்பட்டது. இதிலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் மூதாட்டி ஒருவர் மது பாட்டிலை வரிசையில் நின்று வாங்கி சென்றார். அங்கு சுற்றி இருந்தவர்கள் கையில் மது பாட்டிலை வைத்திருந்த மூதாட்டியை நகைப்புடன் பார்த்து சென்றனர். சிலர் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வாங்குவதாக கூறி கடை விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றனர்.

இதுபோல் உப்பிலியபுரம், சோமரசம்பேட்டை, சமயபுரம், மண்ணச்சநல்லூர், தா.பேட்டை, முசிறி, ஜீயபுரம், லால்குடி, திருச்சி செம்பட்டு பகுதிகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.

Next Story