கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க முயற்சி: பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க முயற்சி: பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 8 May 2020 8:46 AM IST (Updated: 8 May 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க முயன்றதால் பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

செந்துறை,

செந்துறை அருகே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க முயன்றதால் பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

அரியலூர் மாவட்டத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்த நிலையில், அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் சிறுகடம்பூர், உஞ்சினி, பரணம், பெரியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, கொரோனா உறுதி செய்யப்பட்ட வாலிபர்கள் உள்ளிட்டோரை, அவர்கள் வசித்த கிராமங்களுக்கே நேற்று முன்தினம் கொண்டு வந்து சுகாதாரத்துறையினர் விட்டுச்சென்றனர். இதற்கு அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பள்ளியை முற்றுகை

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், செந்துறை முகாமில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட 230 பேரையும் மீண்டும் முகாம்களுக்கு அழைத்து வர முடிவு செய்தனர். அவர்களை ஏற்கனவே கொண்டு சென்று வீட்டில் விட்ட பள்ளி வாகனங்கள் மீண்டும் வர மறுத்து விட்டன. இதனால் அவர்களை நடைபயணமாகவும், இருசக்கர வாகனங்களிலும் முகாமிற்கு கொண்டு வந்தனர்.

புதிதாக பெரியாக்குறிச்சி அரசு பள்ளியில் 100 பேரை தங்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்து, சிலரை கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் நள்ளிரவில் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா நோயாளிகளை அப்புறப்படுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம், என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் முத்துகிருஷ்ணன் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை மீட்டு சென்றார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை, ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைத்து உள்ளனர்.

Next Story