மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதால், கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்கும் - காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி


மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதால், கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்கும் - காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 3:42 AM GMT)

மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்கும் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் தெரிவித்தார்.

காட்பாடி,

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து மதுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டின் முன்பு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக போராடினார்கள்.

இதில், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர் ஆனந்த் எம்.பி., இளைஞரணி துணைஅமைப்பாளர் சுனில்குமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு பின்னர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதலில் சொன்னது தி.மு.க. தான். ஆனால் அதனை அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை.கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர்கள் பூக்கடையை தான் மாற்ற ஏற்பாடு செய்தனர். சென்னையில் ஊரடங்கு உத்தரவை திடீரென அறிவித்ததால் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் விளைவாகவே கொரோனா தொற்று அதிகரித்தது. எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அரசு கவனம் செலுத்தினால் தொற்று மேலும் பரவாமல் இருக்கும். கொரோனா வைரஸ் மிகவும் ஆட்கொல்லி வைரஸ் ஆகும். அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். இதனை கண்டித்து தான் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துகிறோம். டெண்டர் விவகாரத்தில் ஊழல் நடந்தது பற்றி யார் தான் தங்கள் தவறை ஒத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story