சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு பணியாளர்களை அழைத்து வர இயக்கப்பட்ட பஸ்களை ஊருக்குள் விடாமல் தடுத்த கிராம மக்கள் - கொரோனா தொற்று அதிகரிக்கும் என அச்சம்


சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு பணியாளர்களை அழைத்து வர இயக்கப்பட்ட பஸ்களை ஊருக்குள் விடாமல் தடுத்த கிராம மக்கள் - கொரோனா தொற்று அதிகரிக்கும் என அச்சம்
x
தினத்தந்தி 8 May 2020 4:00 AM IST (Updated: 8 May 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரிக்கும் என்ற அச்சத்தால், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கு வேலைக்காக பணியாளர்களை அழைத்து வர இயக்கப்பட்ட பஸ்களை கிராம மக்கள் ஊருக்குள் விடாமல் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டுத் தடுத்தனர்.

செய்யாறு,

ஊரடங்கு அமலில் உள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுபடி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினத்தில் இருந்து செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒருசில தொழிற்சாலைகள் இயங்க தொடங்கின.

அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய பாதுகாப்புடன் தொழிற்சாலைகளை இயக்குகிறோம், விருப்பமுள்ள தொழிலாளர்கள் பணிக்கு வரலாம் எனத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூறினர். அதைத்தொடர்ந்து நேற்று தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பல்வேறு கிராமங்களில் உள்ள பணியாளர்களை வேலைக்கு அழைத்து வர, பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆனால் நெடும்பிறை, பாப்பந்தாங்கல் பெருங்களத்தூர், ஆக்கூர், மடிப்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் வசிப்போர், கொரோனா தொற்று அதிகரிக்கும் என அச்சப்பட்டு, எங்களின் கிராமங்களுக்குள் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலை பஸ்கள் வரகூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சாலையின் குறுக்கே பனை மரங்கள், முள்செடிகள் ஆகியவற்றை வெட்டிப் போட்டு, பஸ்கள் செல்ல முடியாமல் தடுத்தனர்.

ஒருசில கிராமங்களில் காய்ந்த மரக்கட்டைகளை சாலையின் குறுக்கே போட்டு தடுப்பு ஏற்படுத்தி தொழிற்சாலை பஸ்களை விடாமல் தடுத்தனர். இதனால் சாலையில் பஸ்கள் செல்ல முடியாத நிலையில், பணியாளர்கள் சிலர் தங்களின் மோட்டார்சைக்கிள்களில் தொழிற்சாலைகளுக்கு பணிக்கு வந்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று அந்தந்தக் கிராம மக்களின் உதவியோடு சாலையின் குறுக்கே கிடந்த பனை மரங்கள், முள்செடிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். எனினும், குறைந்த அளவிலான பணியாளர்களே வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணியாளர்களை வைத்து, தொழிற்சாலை நிர்வாகம் காலணிகளை உற்பத்தி செய்தனர்.

Next Story