அரக்கோணம் அருகே, கொரோனா தொற்றை தடுக்க தலையில் வேப்பந்தழையுடன் நரிக்குறவர்கள் “இந்த கோட்டை தாண்டி நீயும் வர கூடாது; நானும் வர மாட்டேன்”
கொரோனா தொற்றை தடுக்க அரக்கோணம் அருகே வசிக்கும் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் தலையில் வேப்பந்தழையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அரக்கோணம்,
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பு மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. கொரோனா தொற்றில் நம்மை பாதுகாத்து கொள்ள முககவசம், சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தணிகைபோளூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நரிக்குறவ மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வைத்து அவர்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 5-ந் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் நேற்று அரக்கோணம் நகருக்கு வந்தனர். அப்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தலையில் ஒரு கொத்து வேப்பந்தழையை வைத்து கொண்டு கடையில் சென்று பொருட்கள் வாங்கினார்.
வேப்பந்தழை குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
சாமியோ, நரிக்குறவ இனத்தை சேர்ந்த நாங்கள் காட்டுப்பகுதியில் வேட்டையாடி வந்தாலும் எங்கள் முன்னோர்களுக்கு நாட்டு மருத்துவ முறைகளும் தெரியும், அவர்கள் வம்சாவளியாக எங்களுக்கு அந்த மருத்துவ முறையை கற்றுக் கொடுத்து உள்ளனர். எங்கள் நரிக்குறவ குலத்தில் இன்று கூட யாரும் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றது கிடையாது. நாங்களே நாட்டு வைத்தியத்தை வைத்து சுக பிரசவம் நடக்க வழிவகை செய்வோம். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவமனைக்கு செல்ல மாட்டோம். நாங்கள் கை மருந்தை சாப்பிட்டு குணப்படுத்தி கொள்வோம்.
தற்போது வாயிலே நுழையாத பெயரில் நோய்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் நோய் தன்னை எளிதில் தாக்காத வகையில் எங்கள் பகுதியில் உள்ள வேப்பந்தழையை ஒரு கொத்து பறித்து வீட்டில் உள்ள அனைவரும் தலையில் வைத்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதை கடந்த 40 நாள்களாக செய்து வருகிறோம். தினமும் காலையில் வேப்பந்தழையை பறித்து தலையில் வைத்துக் கொள்வோம். வேப்பந்தழையில் அவ்வளவு மருத்துவ குணம் உள்ளது. இதை தாண்டி எப்படிபட்ட நோயாக இருந்தாலும் நம்மை நெருங்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
அப்போது ஒருவர் கூறுகையில் ஒரு தமிழ் சினிமா படத்தில் வடிவேல் செய்யும் காமெடி போல, கொரோனா தொற்று நோய்க்கு நாங்கள் சொல்வது என்னவென்றால் “இந்த கோட்டை தாண்டி நீயும் வர கூடாது! நானும் வர மாட்டேன்!! பேச்சு பேச்சா இருக்கணும்... அப்படியே எங்ககிட்ட வந்தால் எங்களின் பாரம்பரிய வேப்பந்தழை எங்களை தற்காக்கும்” என்றார்.
Related Tags :
Next Story