மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்: கோவை மாவட்டத்தில் 206 டாஸ்மாக் கடைகள் திறப்பு - டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாங்கினர்


மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்: கோவை மாவட்டத்தில் 206 டாஸ்மாக் கடைகள் திறப்பு - டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாங்கினர்
x
தினத்தந்தி 8 May 2020 4:00 AM IST (Updated: 8 May 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 206 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் டோக்கன் பெற்று வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பகுதிகளில் ஊரடங்கை சற்று தளர்த்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மதுக்கடைகளும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் கடந்த 43 நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், மதுபிரியர்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்கும் பொ ருட்டு கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளிவிட்டு நிற்கும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டு இருந்தன.

ஒருவர் மதுபாட்டில் வாங்கிவிட்டு வந்த பின்னரே அடுத்தவர் செல்லும் வகையில் கண்காணிக்கப்பட்டது. மேலும் 5 பேருக்கு மேல் அங்கு கூடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்க கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதுபோல் கோவை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு கடைக்கும் 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் போலீஸ் அதிகாரிகள் ஜீப்பில் ரோந்து வந்தபடி இருந்தனர். கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் ஆயிரம் போலீசார் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டனர்.

கோவை பூமார்க்கெட் அர்ச்சனா தியேட்டர் அருகே உள்ள மதுக்கடை உள்பட பல்வேறு இடங்களில் காலை 6 மணிக்கே மதுப்பிரியர்கள் வந்து குவிந்தனர். கடை எப்போது திறக்கும் என்று காத்திருந்தனர். கோவை புறநகர் பகுதிகளில் மொத்தம் 110 கடைகளும், மாநகர் பகுதிகளில் 96 கடைகளும் மொத்தம் 206 கடைகள் திறக்கப்பட்டன. ஆதார் அட்டை கொண்டு வருவதுடன், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்ததால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வந்தனர். முகக்கவசம் இல்லாதவர்கள் கைகுட்டையால் முகத்தை மறைத்தபடி வந்தனர்.

மதுவாங்க வருவர்களுக்கு பொதுவான ஒரு இடத்தில் வைத்து டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக காலை முதல் ஏராளமானவர்கள் குவிந்தனர். கோவை கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. காலை முதலே அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தண்ணீர் பாட்டில்களுடன் வந்து வரிசையில் நின்றனர். வெயில் அதிகமாக இருந்ததால் வரிசையில் குடை, காலிபாட்டில்களை வைத்தும் இடம்பிடித்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர்வரை நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்துநின்றனர்.

43 நாட்களுக்கு பிறகு மதுக் கடை திறக்கப்பட்டதும் அங்க காத்திருந்த மதுப்பிரியர்கள் கைதட்டி, விசிலடித்து தங்களது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஒருசில மதுக்கடைகள் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் வேப்பிலைகளை கட்டி வைத்திருந்தனர்.

மதுக்கடைக்கு வந்த மதுபிரியர்கள் கூறும்போது, நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகள் திறந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதார்கார்டு இல்லாமல் மதுபாட்டில்கள் வழங்க வேண்டும். மனைவியிடம் ஆதார் கார்டை கேட்டால் வைத்துக்கொண்டு தர மறுக்கிறார்கள். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்படுகிறது. எனவே ஆதார் கார்டு இல்லாமல் மதுபாட்டில்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். சிலர் கூறும்போது மதுக்கடைகள் திறந்து இருப்பதால்தான் குடிக்கிறோம். இல்லாவிட்டால் குடிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் முழுவதிலும் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் இளம்வயதினர் முதல் வயதானவர்கள் வரை மதுபாட்டில்களை வாங்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு மாவட்டம்முழுவதும் மதுவிற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story