கரூரில் காய்கறி வியாபாரி உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா


கரூரில் காய்கறி வியாபாரி உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா
x

கரூரில் காய்கறி வியாபாரி உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தோகைமலை, 

கரூரில் காய்கறி வியாபாரி உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வாலிபருக்கு தொற்று

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலையை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த வாலிபர் தனது வீட்டில் இருந்து வந்தார். பின்னர் திருச்சியில் உள்ள ஜி-கார்னர் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து, ராச்சாண்டார் திருமலை கடைவீதியில் தரைக்கடை அமைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் திருச்சியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் அந்த வாலிபர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ராச்சாண்டார் திருமலைக்கு வந்து அந்த வாலிபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வாலிபரின் மனைவி, 13 வயது மகள் உள்பட அவரிடம் தொடர்பில் இருந்த மொத்தம் 15 பேரை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கின்றனர். தொடர்ந்து காய்கறி வியாபாரம் செய்த கடைவீதி பகுதியை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் வசித்து வந்த தெருவிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கிருமி நாசினி தெளிப்பு

பின்னர் ராச்சாண்டார் திருமலை பகுதியில் உள்ள வீதிகள், குடியிருப்புகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள புழுதேரி, ஆர்ச்சம்பட்டி, வடசேரி, ராச்சாண்டார் திருமலை ஆகிய கிராமங்களில் 1,656 வீடுகளில் வசிக்கும் 8,435 பேரின் உடல்நிலைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி

இதேபோல மராட்டிய மாநிலத்தில் இருந்து கரூர் பள்ளப்பட்டிக்கு காரில் வந்த 47 வயதுடைய ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் காரில் ஊர் திரும்பிய 6 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 25 வயதுடைய வாலிபருக்கும், 54 வயதுடைய முதியவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 16 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக சுகாதாரத்துறையினர் காத்திருக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 3 பேர் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story