சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் திறப்பு: மகிழ்ச்சியில் திளைத்த மதுப்பிரியர்கள்


சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் திறப்பு: மகிழ்ச்சியில் திளைத்த மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2020 4:52 AM GMT (Updated: 8 May 2020 4:52 AM GMT)

சேலம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 168 டாஸ்மாக் கடைகளில் நேற்று மது வாங்க கூட்டம் அலைமோதியது. அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இருந்த போதிலும் சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் 48 கடைகள் கட்டுப்பாடுகள் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருவதால் அந்த கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. மீதமுள்ள 168 டாஸ்மாக் கடைகளும் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் ஒரு சில கடைகள் முன்பு காலை 8 மணிக்கே மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். அனைத்து கடைகள் முன்பும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. மேலும் தடுப்பு கம்புகள் நீண்டதூரம் அமைக்கப்பட்டிருந்தன.

2 கிலோ மீட்டர் தூரம்

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை தொடங்கியது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் அனைத்து கடைகளிலும் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சேலம் மாநகரில் 46 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் மது வாங்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

அதேபோல் முள்ளுவாடி கேட் பகுதியிலும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழியில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து ஏராளமானோர் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கிச் சென்றதை காண முடிந்தது. ஒரு சிலர் வீட்டிலிருந்து குடைகளையும், மது பாட்டில்கள் எடுத்து செல்ல பைகளையும் கையில் எடுத்து வந்திருந்தனர்.

டோக்கன்

ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பு ஊழியர்கள் நின்று கொண்டு மதுப்பிரியர்களின் கையில் சானிடைசர் ஊற்றி மது வாங்குமாறு அனுப்பி வைத்தனர். அதே சமயம் சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் அங்கு போலீசார் சென்று அறிவுறுத்தினர். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையாக நிற்க வைத்து டோக்கன் வழங்கப்பட்டு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் காலை முதல் மாலை வரை காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றார்கள். அதேசமயம் முக கவசம் அணியாதவர்களுக்கு மதுவகைகள் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சேலம் மாநகரை பொறுத்தவரையில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஜாகீர் அம்மாபாளையம், களரம்பட்டி உள்ளிட்ட சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்களும், முதியவர்களும் டவுன் பகுதிக்கு வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார்கள். டாஸ்மாக் பார் எதுவும் திறக்கப்படாததால் மது பிரியர்கள் அனைவரும் மது வகைகளை தங்களது வீடுகளுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் திளைத்தனர்.

போலீஸ் தடியடி

அதாவது சாதாரண நாட்களில் ஒருவர் ஒரு குவார்ட்டர் மட்டும் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தற்போது மதுப்பிரியர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மது பாட்டில்களை அதிக அளவில் பணம் கொடுத்து மொத்தமாக வாங்கிச் சென்றதை காண முடிந்தது. சேலம் சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மது பிரியர்கள் காத்திருந்து வாங்கி சென்றனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழியில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கு ஒருவர் அருகருகே நின்றதால் போலீசார் அவர்களை விலகி நிற்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் யாரும் கேட்காத பட்சத்தில் போலீசார் கையில் வைத்திருந்த லத்தியால் லேசான தடியடி நடத்தி ஒழுங்கு படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதிகாரிகள் ஆய்வு

இதே போல சிவதாபுரம், ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, மல்லூர், வீரபாண்டி, சங்ககிரி, மேச்சேரி, தேவூர், இளம்பிள்ளை, அயோத்தியாப்பட்டணம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது. காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் இடைவிடாமல் மாலை 5 மணி வரையிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன் தலைமையில் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்றும், முக கவசம் அணிந்து வந்து இருக்கிறார்களா? என்றும் கண்காணித்தனர்.

முக கவசம் அணியாமல் வரும் மது பிரியர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் மதுபாட்டில் வழங்கக்கூடாது என்றும் கடை ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர் வேடியப்பன் அறிவுறுத்தினார்.

Next Story