பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 8 May 2020 5:21 AM GMT (Updated: 8 May 2020 5:21 AM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் 33 பேர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 33 பேரின் விவரம் வருமாறு:-

பெண்ணகோணத்தை சேர்ந்த 10 பேர், காடூரை சேர்ந்த 5 பேர், வரிசைப்பட்டியை சேர்ந்த 3 பேர், புதுவேட்டக்குடி, மேல மாத்தூர், கொட்டரை, கரம்பியம், வேள்விமங்கலம், நன்னை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் உள்பட 33 பேர்.

அரியலூரில் 24 பேர்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 222 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மட்டும் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 24 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 24 பேரின் விவரம் வருமாறு:-

கழுமங்கலத்தை சேர்ந்த 3 பேர், வடுகர்பாளையம், கொலையனூர், கோடாலிகருப்பூர், நாகல்குழி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஆண்டிமடம், தா.பழூர், முனியங்குறிச்சி, செந்துறை, அரண்கோட்டை, கீழகோவிந்தபுத்தூர், கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், வெணாநல்லூர், அமிர்தான்கோட்டை, வடகடல், காட்டுப்பிரியங்கம், வெளிப்பிரியங்கியம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர்.

கர்ப்பிணி

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பெண்கள் உள்பட 24 பேரில், 14 பேர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள். ஒரு கர்ப்பிணி காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவர். மற்ற 9 பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 57 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்து சுகாதாரத்துறையினர் சுகாதாரப்பணிகளிலும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story