குளிக்க சென்றபோது பரிதாபம்: குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


குளிக்க சென்றபோது பரிதாபம்: குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 8 May 2020 11:09 AM IST (Updated: 8 May 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

செந்துறை,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டியை சேர்ந்தவர் விஜயன். அவருடைய மகன் புகழேந்தி (வயது 12). இவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். மதுரை அழகர்கோவில் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்த மகேஷ் மகன் சக்திவேல் (10). இவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

ஊரடங்கையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் சக்திவேல், சமுத்திராபட்டியில் உள்ள தனது தாத்தா பொன்னுச்சாமி வீட்டுக்கு வந்தான். நேற்று முன்தினம் மாலை புகழேந்தியும், சக்திவேலும் அப் பகுதியில் உள்ள உடையான்செட்டிகுளத்தில் குளிக்க சென்றனர். அப்போது 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் தண்ணீரில் தத்தளித்தபடி தவித்துள்ளனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் 2 பேரையும் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே குளிக்க சென்ற 2 பேரும், நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் உறவினர்கள் அவர்களை தேடி குளத்துக்கு சென்றனர். ஆனால் சிறுவர்கள் அணிந்திருந்த ஆடை குளத்தின் கரையில் இருந்தது. இதனால் 2 பேரும் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என உறவினர்கள் தேடும்பணியில்ஈடுபட்டனர்.

அப்போது நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். மாணவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story