வேலூர் மாவட்டத்தில், வங்கதேச பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
வேலூருக்கு சிகிச்சை பெற வந்த வங்கதேச பெண்ணின் மகள், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து ஊர் திரும்பிய தொழிலாளி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 28 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 16 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 11 பேருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வேலூருக்கு வந்திருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பாபுராவ் தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5-ந் தேதி உறுதியானது.
அதைத்தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த 36 வயது மகள், உறவினர் உள்பட விடுதியில் தங்கியிருந்த 46 பேர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில், மூதாட்டியின் 36 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூதாட்டியின் உறவினர் உள்பட மீதமுள்ள நபர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அதைத்தொடர்ந்து அந்த பெண் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த கணியம்பாடி அருகே உள்ள கொட்டாமேடு கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடந்த 3-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பியதாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அதையடுத்து சுகாதாரத்துறையினர் அங்கு சென்று கோயம்பேட்டில் பணிபுரிந்த 4 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சளிமாதிரிகளை சேகரித்தனர். அவற்றின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை மண்டியில் கணக்காளராக பணியாற்றிய 43 வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், பழகியவர்கள் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு தினமும் கிருமிநாசினி தெளிக்கவும், மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த 8 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் என்று 100 பேர் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களின் சளிமாதிரி பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்றால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வங்காளதேச மூதாட்டியின் மகள் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story