ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை - அதிகாரிகள் தகவல்


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 5:39 AM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடியே 40 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் நேற்று டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 45 கடைகள் திறக்கப்படவில்லை. 65 கடைகளில் மதுவிற்பனை செய்யப்பட்டன.

அதேபோன்று அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 7 கடைகள் திறக்கப்படவில்லை. 81 கடைகள் திறக்கப்பட்டன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக திருமண மண்டபங்களில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைகளுக்கு வந்து இறங்கின. கடைகளின் முன்பு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்கள் வாங்கி செல்லவும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே டாஸ்மாக் கடைகளுக்கு ‘குடி’மகன்கள் படையெடுத்தனர். அதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சுமார் 40 நாட்களுக்கு பின்னர் மது அருந்த போகிறோம் என்ற சந்தோஷத்தில் குடிமகன்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அடையாள அட்டையுடன் வந்தவர்கள் மற்றும் முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் வயது வாரியாக ‘குடி’மகன்கள் மதுபாட்டில்கள் வாங்கும் நேரம் ஒலிபெருக்கி மூலம் பல டாஸ்மாக் கடைகளில் அறிவிக்கப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் சில கிலோ மீட்டர் தூரம் வரை ‘குடி’மகன்கள் வரிசையாக நின்றனர். மூலக்கொல்லை டாஸ்மாக் கடையில் மூதாட்டிகள் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கி சென்றனர்.

வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பீர், மதுபானங்களும், அரக்கோணம் கோட்டத்தில் சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பிலான பீர், மதுபானங்களும் என்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 40 லட்சம் மதிப்பிலான பீர், மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன என்று டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story