மருதம்பாக்கம் பள்ளிக்கூடத்தில், மது குடித்த தகராறில் வாலிபருக்கு சரமாரி பாட்டில் குத்து - 2 பேர் கைது
மருதம்பாக்கம் பழைய ஆரம்ப பள்ளி வளாகத்தில் மது குடித்த தகராறில் வாலிபரை மது பாட்டிலால் சரமாரியாக குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
சிப்காட் அடுத்த மருதம்பாக்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மில்டன் (வயது 24). இவர், நேற்று மாலை மருதம்பாக்கம் பழைய ஆரம்ப பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த மருதம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (34) என்பவர், பள்ளிக்கூடத்தில் அமர்ந்து ஏன் மது குடிக்கிறாய்? என மில்டனை தட்டிக் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைக்கலப்பாக மாறியது.
உடனே அருள்ஜோதி தனக்கு ஆதரவாக சண்டையிட உறவினர் அரிச்சந்திரன் (31) என்பவரை அழைத்துள்ளார். அவர் வந்ததும், இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் மில்டனை சரமாரியாகக் குத்தினர். அதில் மில்டன் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிப்காட் போலீசில் மில்டன் கொடுத்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி, உறவினர் அரிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் அருள்ஜோதிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தப்பியோடி திருமால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story