திருப்பத்தூர் மாவட்டத்தில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு கடைகள் திறப்பு, போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலைமைக்கு ஏற்றார்போல ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் கடைகள் திறக்கப்பட்டு பஸ் போக்குவரத்தும் விரைவில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
திருப்பத்தூர்,
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு வேலூர் மண்டலம் இந்தியன் வங்கி சார்பில் சக்கர நாற்காலி, நவீன கட்டில்கள் வாங்க ரூ.2 லட்சம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கியின் முதன்மை மேலாளர் சுமலதா தலைமை வகித்தார். வங்கி அலுவலர் டி.ஆர்.கணேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.வடிவேல், அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலெக்டர் சிவன்அருளிடம் வழங்கினார். இதனை அரசு மருத்துவ அலுவலர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், டி.டி.சி.சங்கர், கே.எம்.சுப்பிரமணியம், ஆர்ஆறுமுகம், வங்கி அலுவலர்கள் ராஜசேகர், நாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 7-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி வைரஸ் தொற்று உள்ள பகுதிகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மற்ற பகுதிகளில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவப்பு, மஞ்சள், பச்சை என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு நோய்த்தொற்று குறைய ஆரம்பித்தவுடன் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் தளர்வுகள் செய்யப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்படும். வாகனப் போக்குவரத்தும் நடைபெறும்
டாஸ்மாக் கடையை வைத்து கொரோனா பாதிப்பிலும் தி.மு.க.அரசியல் செய்கிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையை தொடங்கி வைத்தது தி.மு.க.தான். தற்போது அந்த கட்சி போராட்டம் நடத்தி வருவது அரசியல் உள்நோக்கம் ஆகும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவினால் தற்காலிகமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story