தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில், மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
கொரோனா பரவாமல் தடுக்க வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே நேற்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களுடைய வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தினர். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ., தலைமையில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
இதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் சீலப்பாடியில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது மதுக்கடைகள் திறப்பை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையத்தில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தனது வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவருடன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியதுணைத்தலைவர் தங்கம், கள்ளிமந்தையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நத்தத்தில் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.செல்வராகவன் தலைமையில் திண்டுக்கல் சமாதானநகரில் உள்ள அவருடைய வீட்டு முன்பு போராட்டம் நடந்தது. அதேபோல் மாவட்ட ம.தி.மு.க. அலுவலகம் முன்பும் போராட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் செல்வேந்திரன், துணை செயலாளர் அய்யாத்துரை, பேச்சாளர் கோடையிடி நாராயணசாமி, மதர்லேன்ட் மரியா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல் சத்திரம் சாலையில் உள்ள மதுக்கடை அருகே மறியல் போராட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தமிழக அரசை கண்டித்தும், மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்தும் கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
மேலும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுக்கடை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் விஷ்ணுவர்த்தன், செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் குடையை பிடித்தபடி நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நிலக்கோட்டையில் தி.மு.க. நகர செயலாளர் கதிரேசன் தலைமையில், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிலக்கோட்டை கூவனூத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சாதிக்அலி மதுக்கடையை திறக்கக்கூடாது என்று பதாகைகளை ஏந்தி தனி மனிதனாக போராட்டம் செய்தார்.
இதேபோல் சாணார்பட்டி ஒன்றியத்தில் கோபால்பட்டி, ஆவிளிபட்டி, திருமலைக்கேணி, கன்னியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்னியாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் க.விஜயன், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணை தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்வரி தலைமையில் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு பெரியபள்ளிவாசல் அருகே மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கனவாபீர், வத்தலக்குண்டு நகர செயலாளர் அலாவுதீன், த.மு.மு.க. நகர தலைவர் இம்தியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் செம்பட்டி மற்றும் பெரும்பாறை பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story